திராவிட நாகரிகம் ( DRAVIDIAN CIVILIZATION)

                   திராவிட நாகரிகம்

                 ( DRAVIDIAN CIVILIZATION)


                                                 திராவிடர்களின் தோற்றத்தைப் பற்றிய பலவகைக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. கிழக்கு மத்தியத்தரைக்கடல் நாடுகளிலிருந்து வந்து திராவிடர்கள் இங்கு குடியேறியவர்கள் என்று சிலரும் இந்தியப் பெருங்கடலில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் லெமூரியாக் கண்டம் என்னும் பெரிய ஒரு நிலப்பரப்பு இருந்ததாகவும், அதுவே திராவிடர்களின் பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டும் என்று சிலரும், திராவிடர்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஆதிக்குடிகள் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாறு கருத்து வேறுபாடுகள் பல இருந்த போதிலும் ஆரியர்களின் வருகைக்கு (கி.மு. 2000) முன்பே திராவிடர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வந்த சிறந்த நாகரிகமும் பண்பாடும் கொண்ட மக்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

திராவிடர்கள் யார்?

                                                           திராவிடர் என்ற சொல் அவர்கள் பேசிய மொழியைத்தான் குறிப்பிடுகிறது. அந்த இனத்தை அல்ல' என்ற H.G. ராலின்சன் என்ற   ஆசிரியர் தனது 'இந்தியா' என்ற புகழ் பெற்ற நூலில் தெரிவிக்கிறார். 'திராவிட' என்ற சொல் தமிழ் என்ற சொல்லின் திரிபு ஆகும். 'திராவிட' என்ற சொல்லே தமிழ் என்று மருவியது என்பர். மேலும் திராவிடர் என்பது பரந்த ஒரு இனத்தைக் குறிக்கிறது என்றும் கூறுவர். திராவிடர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா, அல்லது பிற நாட்டிலிருந்து ஆரியர்களுக்கு முன்னர் இங்கு வந்தவர்களா என்பது பற்றி உண்மையான கருத்து வேறுபாடு உள்ளது.
                                       ஆனால் திராவிடர்கள் வடஇந்தியா முழுவதும் பரவலாக இருந்திருக்கிறார்கள் என்பது வட மேற்கு இந்தியாவிலுள்ள பலூச்சிஸ்தானத்தில் பிராகுயி என்ற மொழியினைப் பேசும் மக்களால் அறியப்படுகிறது. வெளி நாட்டிலிருந்து இந்தியாவில் புகுந்த திராவிடர்கள் தங்கள் இனத்தவர்களின் ஒரு பகுதியை அங்காங்கு விட்டு வந்திருக்கக்கூடும் என்பதும் அவர்களில் பிராகுயி மொழி பேசும் கூட்டத்தினரும் ஒருவராக இருக்கலாம் என்பதும் ஏற்கத் தகுந்த கருத்துக்களே ஆகும்.
                                                               சிந்து வெளி நாகரிகத்திற்கும் திராவிடர் நாகரிகத்திற்கும் தொடர்பு உண்டு என்று நாம் கருதினால் பண்டைய சுமேரியர்களுக்கும், சிந்து வெளி மக்களுக்கும் தொடர்பு உண்டு என்பது புலனாகும். இவ்வகையில் பார்த்தால் வட மேற்கு வழியாக இந்தியாவினுள் புகுந்தவர்கள் திராவிடர்களே என்பதில் ஐயம் இருக்க முடியாது.
                                                                                                ராலின்சன் என்ற ஆசிரியர் V. வான் எக்ஸ்ட ட் (V. Von Ecksted) என்பவரின் கருத்தை ஆதரித்து திராவிடர் பற்றி மேலும் சில கருத்துக்களைத் தெரிவிக்கிறார். ''உறைபனிப் பரவலின் பின்னர் உள்ள காலத்தில் இந்தியாவில் ஆப்பிரிக்கா மற்றும் மேலேனிஷியா (Melanesia) போன்ற பகுதிகளைச் சேர்ந்த நீக்ரோக்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் இரு வகைப்படுவர். ஒரு பகுதியினர் காடுகளிலும் மற்றொரு பகுதியினர் நதிப்பள்ளத்தாக்கின் தீரங்களிலும் குடியேறினர்.
                                                                         இவர்கள் இருவரையும் அடுத்து வடக்கிலிருந்து இலங்கையிலுள்ள வெட்டர் (Vedder) களைப் போலவும், நீலகிரி மாவட்டத்திலுள்ள இருளர் (Irular)களைப் போலவும் உள்ள மக்கள் அங்கு குடியேறினர். காலப் போக்கில் இவர்கள் ஒன்றிணைந்து வெட்டிட்டுகள் (Veddits) என்ற பெயர் பெற்றனர்.
இவர்களையடுத்து அங்கு வந்து குடியேறிய இனமக்கள் மேலானிட்டுகள் (Melanids) ஆவர். இவர்களது முன்னவர்களைக் காட்டிலும் சற்று மாறுபட்டிருந்தது.                                                                                                                                             இலங்கையின் வடபகுதியில் வாழும் மக்களிடத்திலும், தமிழர்களிடத்திலும் இதனைக் காணலாம். அவர்கள் ' பேசிய மொழியே தமிழாகும். இது வடவர்களால் தெற்கில் இணைக்கப்பட்ட மொழி என்று கருதப்படுகிறது. ஆரிய மொழி பேசியவர்கள் 'இன்டிடட்டுகள்' (Indids) என்றழைக்கப்பட்டனர். உறைபனி பரவல்காலத்தின் போது ஈரானிலுள்ள ஏரிகளேல்லாம் வற்றத் தொடங்கிய பின் அவர்கள் இந்தியா வந்து குடியேறினர். அப்படிக்குடியேறிய அவர்கள் விரைவிலேயே தக்காணம் முதலிய பகுதிகளில் பரவினர். ஒருவேளை வான் எக்ஸ்டம் குறிப்பிடும் மெலானிட்டுகள் தெற்கில் வாழ்ந்த திராவிடர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
                                                           திராவிடர்கள் சற்றுக் குள்ளமாகவும், கரு நிறம் உடையவர்களாகவும் இருந்தனர். கரிய கண்களையும், சுருண்ட முடியையும், உறுதியான உடலமைப்பையும் பெற்றிருந்தார்கள்.

 திராவிட நாகரிகத்தின் முக்கிய அம்சங்கள்:

                                                                திராவிடர்களின் நாகரிகம் ஒரு தனி நாகரிகம். அவர்கள் நகர வாழ்க்கை வாழ்ந்தார்கள். முதன் முதலில் கிராமங்களிலும் பின்னர் நகரங்களிலும் வாழ்ந்தனர். அவர்களுடைய வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டவை. அவர்கள் நகரங்களையும் கோட்டைகளையும் அமைத்தனர். நகரங்களைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண்களை அமைத்தனர்.

திராவிடர்களின் சமூக, அரசியல் வாழ்க்கை :

                                                 திராவிடர்களிடையே சாதி வேறுபாடு கிடையாது. திராவி சமுதாயத்தின் தலைவர் அரசரே. தம்மைப் பகைவர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் காப்பாற்றிக்கொள்ள வில், வேல், வாள், அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினர். மக்களின் பாதுகாப்பிற்காக அரசர்களிடம் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளும் இருந்தன. இவர்கள் போரில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். சட்டங்களும் , பழக்கவழக்கங்களும் கொண்ட திராவிட மக்களிடம் திருமண முறை இருந்தது. எழுத்துக்கலை பற்றி அவர்கள் அறிந்திருக்கக்கூடும். திராவிட மொழியே அவர்களது மொழியாகும். தென்னிந்தியாவில் தற்போது பேசப்பட்டு வரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை திராவிட மொழிகளாகும். 

திராவிடர்களின் தொழில்:

                                                       திராவிடர்களின் முதன்மையான தொழில் விவசாயம் ஆகும். அவர்கள் ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீர்ப்பாசன வசதி செய்து கொண்டனர். ஓரளவு எல்லா உலோகங்களைப் பற்றிய அறிவு அவர்களிடம் இருந்தது. உலோகங்களைக் கொண்டு அணிகலன்கள் செய்தல் மற்றும் துணி நெய்தல், மட்பாண்டங்கள் செய்தல், தச்சு வேலை, தந்த வேலை முதலிய தொழில்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. நூல் நூற்றல், சாயம் தீட்டுதல், கப்பல் கட்டுதல், படகு கட்டுதல் ஆகிய தொழில்களையும் அறிந்திருந்தனர்.


திராவிடர்களின் சமயம்:

                                                               கடவுள் மீது நம்பிக்கை கொண்ட திராவிடர்கள் பல ஆலயங்கள் கட்டினர். விக்கிரக ஆராதனை செய்தனர். அவர்கள் சிவன், சக்தி ஆகிய கடவுள்களையும், மரங்கள், பாம்புகளையும் வணங்கினர். இறை கவங்களை மலர்கள், கனிகள், இலைகள், நீர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இன்று இந்து மதத்தில் காணப்படும் கடவுள்களெல்லாம் திராவிடர்களின் படையெடுப்பாகும். பழங்கால இப்தியரைப் போல அவர்கள் இறந்தவர்களை அவர்களுடைய ஆடை அபாணங்களுடன் புதைத்தனர். 'இறந்தபிறகும் ஆத்மாவுக்கு வாழ்வு உண்டு' என்று திராவிடர்கள் நம்பினர். 

அயல்நாட்டு வாணிபத் தொடர்பு:

                                                     திராவிடர்கள் பன்னாட்டுத் தொடர்பும் கொண்டிருந்தனர். மரக்கலங்களில் சென்று அயல்நாடுகளுடன் வாணிபம் செய்து வந்தனர். முத்து, மயில் தோகை, யானைத்தந்தம், அரிசி, நறுமணப் பொருட்கள், மெல்லிய பருத்தி ஆடை, தேக்கு மரம் போன்றவற்றை மேற்கு ஆசியா, எகிப்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.
                                                இவ்வாறு திராவிடர்கள் வரலாறு போற்றும் நமது முன்னோர்கள் ஆவார்கள். வரலாற்றுக்கு முந்திய கால இம்மக்கள் மெசபட்டோமியா, சுமேரியா, எகிப்து, மற்றும் இந்திய நாகரிகங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளனர். இந்து மதத்திற்கும். இந்தப் பண்பாட்டிற்கும் திராவிடர்கள் ஆற்றிய தொண்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


Comments

  1. இல்லாத இனத்துக்கு இவ்வளவு பெரிய கதை

    ReplyDelete
    Replies
    1. இருக்க இனமோ இல்லாத இனமோ

      இப்படித்தான் திராவிடம் இருந்தது

      என்று எல்லோரும் தெரிந்து கொள்ளட்டுமே

      சகோதரி

      Delete

Post a Comment