முந்திய வேதகால நாகரிகம் (அல்லது) ரிக் வேதகால நாகரிகம் (RIGVEDIC CIVILIZATION)
அறிமுகம் :
ஆரியர்களின் ஆரம்பகால வரலாறு புரியாத புதிராகவே இருந்த போதிலும், அவர்களின் வருகைக்குப் பின்னரே இந்தியா வரலாற்றுத் காலத்திற்குள் நுழைகிறது. சிந்து வெளி நாகரிகத்திற்குப் பின்னர் இந்தியாவில் சிறப்புமிக்க நாகரிகத்தைத் தந்தவர்கள் ஆரியர்கள் ஆவர். வேதங்களில் சிறந்த வேதமாகிய ரிக் வேதம் ஆரியர்களின் புனித நூலாகும். இது வேதங்களிலே மிக முக்கியமானதும் மிகப் பழமையானதுமாகும். ஆரியர்கள் பேசிய முதல் வார்த்தை ரிக் வேதமாகும் என்கிறார் ஜெர்மானிய அறிஞர்மாக்ஸ் முல்லர்.
ரிக் வேதத்திலிருந்தே ஆரியர்களின் நாகரிகம் பற்றி அறிகிறோம். எனவேதான் இதனை ரிக் வேதகால நாகரிகம் என்கிறோம். இந்திய வரலாற்றில் வேதகாலம் கி.மு. 1500 முதல் 500 ஆண்டு வரையிலான காலம் ஆகும். ரிக் வேதகால அரசியல் சமுதாய, பொருளாதார சமயநிலை பற்றி இனி ஆய்வோம்.
அரசியல் நிலை : Political Condition
அரசன் :-
ரிக் வேதகால ஆரியரிடையே மன்னராட்சி முறை வழக்கிலிருந்து. அரசனே ரிக் வேத மக்களின் உயர்ந்த தலைவனாவான். மன்னர் மரபு வழியில் நியமிக்கப்பட்டார். சில நேரங்களில் தகுதிவாய்ந்த மன்னரை மக்கள் தேர்ந்தெடுத்தனர். மன்னரின் முக்கியமான கடமை மக்களைப் பாதுகாப்பது ஆகும். அதனால் அவனை 'பாதுகாவலன்' என்று அழைத்தனர். எதிரிகளுடன் போரிட்டு நாட்டு எல்லையைக் காப்பதும், உள்நாட்டுக் குழப்பங்களை அடக்குவதும் அவன் கடமையாகும்.
மன்னருக்கு உதவியாக பலர் இருந்தனர்.
'புரோகிதர்' அல்லது மதகுரு இவர்களுள் முக்கியமானவர். மன்னனுக்கு அவ்வப்போது அறிவுரை கூறுவதும், போரில் வெற்றி பெறுவதற்கு பிரார்த்தனை செய்வதும், வெற்றி பெற்ற மன்னரை வாழ்த்துவதும் புரோகிதரின் பணியாகும். விசுவாமித்திரர், வஸிட்டர் போன்றோர் அக்காலத்தில் சிறந்த புரோகிதர்களாக அரசனுக்குப் பணிபுரிந்தனர் என்று ரிக் வேதத்தின் வாயிலாக அறிகிறோம். அடுத்து மன்னருக்குச் செய்திகளைத் திரட்டிக் கொண்டு வர 'ஒற்றர்கள்' இருந்தார்கள். தவறு செய்த மக்கள் ஒற்றர்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டார்கள்.
'சேனானி' என்னும் படைத்தலைவர் மற்றுமொரு முக்கிய அதிகாரி ஆவார். படையெடுப்பை மேற்கொள்வது சேனானியின் கடமையாகும் .''கிராமணி' என்பவர் கிராமங்களின் அரசியலையும்,பாதுகாப்பு வேலைகளையும் மேற்கொண்டார். கோட்டை கொத்தளங்கள் 'பூர்பதி' என்பவரின் பாதுகாப்பில் இருந்தன.
சட்டத்துறை, நீதித்துறை,நிர்வாகத்துறை ஆகிய மூன்றிற்கும் மன்னரே தலைவராகத் திகழ்ந்தார். தன்னுடைய ஆலோசகர்களின் துணையுடன் மன்னர் நீதி வழங்கினார். பொதுவாக குற்றங்கட்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும் மரணதண்டனை கொடுக்கும் முறை வழக்கத்தில் இல்லை .
மன்னருக்கு ஆலோசனை கூற இரண்டு மன்றங்கள் இருந்தன். 1)சபா2) சமிதி ஆகும். இந்த சபைகளின் பணிகள் குறித்து ஒவ்வொரு அறிஞரும் ஒரு கருத்தைச் சொல்கின்றனர்.
சபா :
சபாவினைப் பொருத்தமட்டில் அது அரசன், உயர்குடியில் பிறந்த செல்வந்தர்கள், அறிஞர்கள் ஆகியோர் அடங்கிய பொது அமைப்பு என்று தெரிகிறது. இதில் பெண்களுக்கு இடமில்லை. பொதுப்பிரட்சனைகட்கு முடிவுகாண்பது சபாவின் முக்கியமான கடமையாக இருந்தது. அரசனுக்கு ஆலோசனையும் கூறி வந்தது. பிற்கால இலக்கியக் குறிப்புகளிலிருந்தது சபா நீதிமன்றமாகவும் செயல்பட்டது என்று கருத இடமுண்டு.
சமிதி :
''சபாவைவிட சமிதியே மிகவும் முக்கிமானது என்றும் அது மக்கள் அனைவரையும் அல்லது மக்கள் சார்பாளர்களைக் கொண்ட ஓர் அமைப்பு" என்றும் டாக்டர் கே. பி. ஜெயஸ்வால் கூறுகிறார். இதில் பொதுப் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது. இது சட்டங்கள் இயற்றவும், போர் மற்றும் சமாதானம் பற்றி முடிவு செய்யவும் அதிகாரம் கொண்டது. மன்னரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இதற்கு இருந்ததாக ரிக் வேதம் கூறுகிறது.
போர்க்காலங்களில் மன்னரும், பிற தலைவர்களும் குதிரை பூட்டிய தேர்களில் ஏறிச் சென்றனர். மற்றவர்கள் காலாட்படையினராகப் போரிட்டனர். ஈட்டிகள், கோடாரிகள், வாள்கள் ஆகியவை முக்கியப் போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. விஷம் தேய்க்கப்பட்ட அம்புகளும் பயன்படுத்தப்பட்டன. தற்காப்பிற்காக மார்புக்கவசத்தையும், பச்சைதோலினாலான கேடயங்களையும் போர்க்களத்தில் பயன்படுத்தினர். குதிரைப்படை குறித்து ரிக்வேதத்தில் செய்தி காணப்படவில்லை.
சமுதாயநிலை :
குடும்பம் :
ரிக்வேத காலத்தில் அரசியல், சமுதாய வாழ்க்கையில் அடிப்படையாக விளங்கியது 'குடும்பம், ஆகும். ஆரியர்கள் கூட்டுக் குடும்ப முறையை அமைத்துக் கொண்டார்கள் என்று வரலாற்றறிஞர் வின்சென்ட்ஸ்மித் கூறுகிறார். குடும்பத்தினர் யாவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். குடும்பத்தின் தலைவர் தந்தை ஆவார். இவருக்கு தன் செத்துக்கள் மீதும், குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் மீதும் தடையில்லா அதிகாரம் இருந்தது. இவர் 'கிருஹபதி' அல்லது 'தம்பதி' என்று அழைக்கப்பட்டார். குடும்பத்தலைவனான தகப்பனுக்கும் குடும்பத்தில் அனைவரும் கட்டுப்பட்டு நடந்தனர்.
பெண்களின் நிலை :
குடும்பத்தில் தகப்பன் வழியாக ஆண்வாரிசுரிமை இருந்து வந்தது. எனவே மக்கள் ஆண் மகனுக்காக கடவுளை வேண்டினர். பெண் குழந்தையை மக்கள் விரும்பவில்லை. ஆயினும் பிறந்த பெண் குழந்தைகளிடம் அன்பும் பரிவும் காட்டப்பட்டன. குழந்தை திருமண முறை வழக்கத்தில் இல்லை.
சமுதாயத்தில் பெண்களுக்கு சிறப்பான இடம் இருந்தது. பெண்கள் ஆடவருடன் சமமாக மதிக்கப்பட்டனர். வாழ்க்கைத் துணை நலத்தைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் இருந்தது. பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையே பரவலாகப் பின்பற்றப்பட்டது. சீதனங்களையும், பரிசுப்பணங்களையும் அளிக்கும் முறை இருந்தது.
திருமணங்கள் அக்னியை சாட்சியாக வைத்து நடைபெற்றன. திருமணம் தெய்வீகத் தன்மையுடையதாகக் கருதப்பட்டது. விதவைகள் மறுமணம் ஆதரிக்கப்பட்டது. சதியெனும் உடன்கட்டையேறும் முறை இல்லை. மனைவியில்லா வேறு மாதருடன் உண்டாகும் கூடா நட்பை சமுதாயம் ஆதரிக்க வில்லை. பெண்களுக்கு கல்வியறிவு அளிக்கப்பட்டது. லோபா, முத்திரை, அபாலா போன்ற சில பெண்கள் கல்வியறிவு மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.
ஆடை ஆபரணங்கள் :
வேதகால ஆண்களும் பெண்களும் ஆடை, ஆபரணங்களில் விசேஷ கவனம் செலுத்தினர். ஆரியர்கள் மூன்று ஆடைகளை அணிந்தனர். உள்ளாடை, மேலாடை, மேலாடை மீது போர்வையாக ஒன்றும் அணிந்தனர். பொதுவாக பருத்தி, கம்பிளி ஆடைகளை அணிந்தனர். பல நில ஆடைகள் வழக்கத்திலிருந்தன. ஆடைகளில் சித்திர வேலைப்பாடுகள் காணப்பட்டன.
ஆரியர்கள் கழுத்து அட்டிகை, காப்பு, ஒட்டியாணம், காதணி, ஹாரம் முதலிய அணிகலன்களை அணிந்தனர். தங்க நகைகளையும் பூமாலைகளையும் சாதாரண காலங்களிலும் அணிந்தனர். பெண்கள் தங்கள் கூந்தலை அழகு படுத்திக் கொண்டார்கள். ஆண்களில் சிலர் தாடி வைத்துக் ள்வதை விரும்பினார்கள். ஆண்கள், பெண்கள் இலுபாலரும் தலைப்பாகை வைத்துக் கொள்வது வழக்கம்.
உணவு:
ஆரியர்கள், இறைச்சி, பால், வெண்ணெய், நெய், காய்கறிகள், பார்லி ஆகியவைகளை உணவுப் பொருள்களாக உட்கொண்டனர். பசு இவர்கட்கு புனிதமான விலங்கு எனவே அதன் இறைச்சியை உண்ணவில்லை. உப்பைப் பற்றிய குறிப்பு ரிக்வேதத்தில் காணப்படவில்லை . சோமபானம், சுராபானம் அருந்தும் வழக்கம் இருந்தது. சோமபானம் செல்வந்தர்கள் அருந்தும் பானம். அது இமயமலைச் சாரலில் விளையும் சோமம் என்ற செடியிலிருந்து தயாரிக்கப்பட்டது. சுராபானம் பார்லியிலிருந்து வடிக்கப்பட்டது. இதனை சாதாரண பொதுமக்கள் அருந்தினர்.விளையாட்டுகள்:
நடனம், இசை, தேர்ப்பந்தயம் ஆகியவை ஆரியர்களின் சிறந்த பொழுது போக்காக விளங்கின. புல்லாங்குழல் முரசு, தாரை, யாழ், மத்தளம் ஆகிய இசைக்கருவிகளை அவர்கள் பயன்படுத்தினர். உணவுக்காகவும், பொழுது போக்குக்காகவும், மிருகங்களையும், பறவைகளையும் வேட்டையாடினர். சொக்கட்டான் காய்களைக் கொண்டு விளையாடும் சூதாட்டமும் சிறந்த பொழுது போக்காக காணப்பட்டது.சாதிமுறை :
பொதுவாக ரிக்வேத காலத்தில் சாதிமுறை காணப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதிமுறை காணப்படவில்லை. ரிக் வேதத்தில் சாதியைப் பற்றிக் காணப்படும் குறிப்பு புருஷ சுத்தம் என்ற சுலோகத்தில் மட்டுமே காணப்படுகிறது. அச்சுலோகத்தில் பிராஜாபதி என்ற படைப்புக் கடவுளின் தலையிலிருந்து பிராமணரும், தோளிலிருந்து சத்திரியரும், தொடையிலிருந்து வைசியரும், பாதத்திலிருந்து சூத்திரரும் தோன்றியதாக குறிப்பு காணப்படுகிறது. (ஆனால் இதனை இடைச் செருகல் என்று வரலாற்றாசிரியர் கருதுகின்றனர்.) தாஸ்யூக்கள் என்ற பழங்குடியினர் ரிக் வேதத்தில் கேவலமாகப் பேசப்பட்டாலும், அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்படவில்லை.பொருளாதார நிலை:
ரிக் வேத கால ஆரியர்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். எனவே விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பார்லி, பீன்ஸ் போன்றவைகளைப் பயிரிட்டனர். ஆனால் நெல் உற்பத்தி செய்யவில்லை, நிலத்தை உழுவதற்கு எருதுகளைப் பயன்படுத்தினர். விவசாயத்திற்கு வெற்றுப் பாசனம், கால்வாய்ப் பாசனம், ஏரிப்பாசனம் ஆகியவற்றால் தண்ணீர் பெறப்பட்டது. ஆடு வளர்ப்பும் ஆரியர்களின் முக்கியத் தொழில் தோல்பதனிடும் தொழிலும், நெசவுத் தொழிலும் சிறந்திருந்தன.படைக் கருவிகளையும், ஆயுதங்களையும் படைத்தனர். பொற்கொள்ளர்கள் தங்கத்தாலும், வேறு உலோகத்தாலும் நகைகளும்,அணிகலன்களும் செய்தனர். கோரைப்புல் மற்றும் நாணல்களைக் கொண்டு பாய்முடையும் கலையில் பெண்கள் சிறந்து விளங்கினர்.
வாணிபத்தையும் ஆரியர் புறக்கணிக்கவில்லை. பண்ணமாற்று முறையில் வாணிபம் நடைபெற்று வந்தது. அச்சிட்ட நாணயம் வழக்கத்தில் இல்லை. பண்டங்கட்கு மாற்றாக பசுக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 'நீட்கம்' என்று வழங்கப்பட்ட தங்கத்துண்டு ஒன்று நாணயமாக பயன்படுத்தப்பட்டது. தரகர்களும் தரகு முறையும் இருந்தன. பாணி எனப்படும் மூத்தவர் பெரும்பாலும் வணிகர்களாக இருந்தனர். ஆரியர்கள் கடல் கடந்து அயல்நாட்டு வாணிபமும் செய்து வந்தனர் என்று கூறவும் இடமிருக்கிறது.
சமயநிலை :
ரிக் வேதகால ஆரியர்களுடைய சமயத்தின் அடிப்படை இயற்கை வணக்கமாகும். இயற்கை சக்திகளைத் தெய்வமாக வழி பட்டனர். அக்கினி, இந்திரன், வாயு, வருணண், சாவித்ரி (தீய சக்திகளை விலக்கும் தெய்வம்) ஆகியவற்றை வழிபட்டனர். ஆனால் கோவில்களோ, உருவ வழிபாடோ இல்லை. வருணன் கடவுளுக்கு முதல் சிறப்பையும், அடுத்த படியாக இந்திரனுக்கும் சிறப்பு தந்தனர். ரிக்வேத ஆரியர்கள் இறைவனிடம் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வேண்டி அதற்காக பல பொருட்களை பலியாகப் படைத்தனர். பால், நெய், தானியம், சோமபானம், இறைச்சி ஆகியவைகளைப் படைத்தனர். பலிகள் சடங்காச் சாரங்களுடன் செய்யப்பட்டதால் மத குருமார்களின் பெருமை அதிகரித்தது. மரணத்திற்குப் பின்னர் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்பினர்.
உலகத்தைப் படைத்துக் காக்கும் கடவுளான 'பிரஜாபதி' என்ற தெய்வம் முதன்மைத் தெய்வமாகக் கருதப்பட்டது. மக்களுக்கு ஒரே கடவுள் என்ற தத்துவம், உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கு பிரம்மன்தான் காரணம் போன்ற நம்பிக்கைகள் ஏற்பட்டது. சொர்க்கம் , நரகம், பிரம்மனின் படைப்புக் கொள்கை , பிறப்பு, மறு பிறப்பு, "கார்மவினைப்பயன், மோட்சம் போன்றவற்றில் தளராத நம்பிக்கை ஏற்பட்டது. யாகங்கட்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டது. யாகங்களை நடத்தும் முறை கடினமாகக் காணப்பட்டதால் மக்கள் சமயத்தையே கடினமாகவும், இயந்திரத் தன்மை பெற்றதாகவும், எண்ண ஆரம்பித்தனர். முந்திய வேதகால நாகரிகம் வேதம் கால இறுதியில் மக்களுக்குத்துறவு வாழ்க்கையில் கடுமையான நம்பிக்கை ஏற்பட்டது,
கலைகளும் விஞ்ஞானமும்:
ரிக்வேத காலத்தில் எழுத்துக்கலை அறிவு இருந்தது என்று பலர் கருதுகின்றனர். குருவிடம் வாய் மூலம் பாடம் கேட்கும் முறை நிலவி வந்தது. வேத இலக்கியங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னரே எழுதப்பட்டது. கட்டிடக்கலையும், சிற்பக்கலையும் வளர்ந்துகாணப்பட்டது. மிகப்பெரிய மாளிகை ஒன்று ஆயிரம் தூண்களையும், கதவுகளையும் கொண்டதாகவும், இது போல் மேலும் பல மாளிகைகள் இருந்ததாகவும் குறிப்புகள் கிடைத்துள்ளன. பல மாளிகைகள் கல்லால் கட்டப்பட்டன. இந்திரனைப் போன்ற உருவச் சிலை இருந்ததாகக் கூறும் குறிப்புகள் உண்டு. இது சிற்பக்கலை வளர்ச்சி பற்றி சான்று பகருகிறது.
விஞ்ஞான அறிவும் ஆரியர்களிடம் வறர்ந்திருந்தது. விண்மீன்கள், கோள்கள் ஆகியவற்றின் நகர்வு பற்றி ஓரளவு அறிந்து வைத்திருந்தனர். வான சாஸ்திர அறிவு ஆரம்ப நிலையிலேயே இருந்தது. ஆரியர்கள் மருத்துவத் துறையில் அதிக முன்னேற்றம் அடையவில்லை . மருந்துகள் மூலம் மட்டுமல்லாது, மந்திரங்கள் மூலமும் பிணிகளைப் போக்கும் சக்தி பெற்றிருந்தார்கள். இரண்சிகிச்சையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
இவ்வாறு ஆரியர்கள் வேதகாலத்தின் முற்பகுதியில் சிறப்பான ஒரு வாழ்க்கையை பின்பற்றி வந்தனர் என்று அறிகிறோம்.
* * * *
Comments
Post a Comment